வீடு, கழிப்பிடம் கட்ட இலக்கு நிர்ணயித்து நெருக்கடி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


வீடு, கழிப்பிடம் கட்ட இலக்கு நிர்ணயித்து நெருக்கடி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

வீடு, கழிப்பிடம் கட்ட இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுப்பதை கண்டித்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிப்பிடம் கட்டுதல் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் கட்டுமான பொருட்களுக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நிலையில் வீடு, கழிப்பிடம் கட்டுவதில் இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை மேற்கொள்வதிலும் அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கூறி, கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அந்த சங்கத்தினர் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகுடபதி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர் வீரகடம்பகோபு, மாவட்ட பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று மாலை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக வழக்கமான பணி முடியும் நேரத்துக்கு முன்பு, மாலை 4.45 மணி முதல் பணியை புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story