கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி புதுவை மாநில விவசாயிகள் நூதன போராட்டம்
கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி புதுவை மாநில விவசாயிகள் டெல்லியில் மண்டைஓடு அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.
திருக்கனூர்,
கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி புதுவை மாநில விவசாயிகள் டெல்லியில் மண்டைஓடு அணிந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு புதுவை அரசியல் தலைவர்கள் ஆதரவு தரவில்லை என்று விவசாயிகள் என வேதனை தெரிவித்தனர்.
புதுவை மாநில விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்தது. அதற்கான கோப்புகளை தயார் செய்து ஒப்புதலுக்காக கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பெடி அந்த கோப்புகளுக்கு ஒப்பதல் வழங்காமல் திரும்பி அனுப்பிவிட்டார். இதனால் கவர்னர் கிரண்பெடி விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகை ரூ.20 கோடியை வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பெடியை திரும்பபெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில விவசாயிகள் டெல்லி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி விவசாயிகள் 35 பேர் கடந்த 25–ந்தேதி டெல்லி சென்றனர்.
அங்கு ஏற்கனவே போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திம் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டம் நேற்று 6 நாட்களாக நீடித்தது. நேற்று அவர்கள் மண்டை ஓடு மாலை அணிந்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்த தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனுவும் அளித்தனர்.
இந்த போராட்டம் குறித்து புதுவை மாநில விவசாயிகள் கூறும்போது, ‘‘தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் டெல்லியில் நேரில் சந்தித்தும் ஆதரவு தெரிகிறார்கள். ஆனால் புதுவை மாநில விவசாயிகளாகிய நாங்கள் கடந்த 6 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் முன்வரவில்லை. இது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றனர்.