முந்திரி மரங்களை வெட்டியதை கண்டித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்-லாரி சிறைபிடிப்பு


முந்திரி மரங்களை வெட்டியதை கண்டித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்-லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே முந்திரி மரங்களை வெட்டியதை கண்டித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மரக்கட்டைகளை ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்தனர்.

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் வனசரகத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் சின்னவளையம், பெரியவளையம், கடாரங்கொண்டான், ஆயுதகளம், தேவாமங்கலம் ஆகிய கிராமங்களில் முந்திரி, தைலமரம் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட காடுகளில் முந்திரி கிளைகள் மற்றும் முட்களை வெட்டும் மராமத்து பணி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். அதனை அந்தந்த ஊர் மக்களிடம் வனசரக அதிகாரிகள் ஏலம் விடுவார்கள். அதில் யார் கூடுதல் விலைக்கு கேட்கின்றார்களோ அவருக்கே ஏலம் விடப்படும்.

அந்த வகையில் வடக்கு ஆயுதகளம் கிராமத்தில் முந்திரி, தைலமரக்கிளைகளை வெட்ட ஏலம் விடப்படும் என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வனசரக அதிகாரிகள் ஏலம் விடாமல் தாங்களாகவே கூலி ஆட்களை நியமித்து பணிகளை மேற்கொண்டனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் இந்த முறை யாருக்கும் ஏலம் விடவில்லை என்று கூறினர்.

லாரி சிறைபிடிப்பு

மேலும் முந்திரிமரக்கிளைகளை வெட்டாமல் மரங்களையே அடியோடு வெட்டியது தெரிய வந்தது. பின்னர் மரங்களை துண்டுகளாக வெட்டி சுமார் 30 டன் எடை கொண்ட கட்டைகளை லாரியில் ஏற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், முந்திரி மரங்களை வெட்டியதை கண்டித்து கட்டைகளை ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் லாரியை பொதுமக்கள் விடுவிக்கவில்லை. இதனால் லாரியை லோடுடன் டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றார். மேலும் எதன் அடிப்படையில் இந்த மரத்தினை வெட்டுகிறீர்கள் என பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு அதிகாரிகள் பதில் தர மறுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story