சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 103 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 103 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 103 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம்,

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்றது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி தாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராஜகோபுரம் கட்டும் பணி

ராஜகோபுர பணியையும் விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதாவது தரை மட்டத்தில் இருந்து 103 அடி உயரம் கொண்டதாக இந்த ராஜகோபுரம் அமைய உள்ளது. இதற்காக கட்டுமானபணிகளுக்கு தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. முதல் கட்டமாக சவுக்கு கட்டைகளால் சாரம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்தபதிகள் சதாசிவம், பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 40 பணியாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து ராஜகோபுர கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 நிலைகளிலும் சுவாமிகளின் அழகான சிற்பங்கள் உருவாக்கப்பட்டு இன்னும் 1½ ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Tags :
Next Story