திருமாவளவன் தம்பியுடன் வாக்குவாதம் செய்த விவசாயி கைது கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி


திருமாவளவன் தம்பியுடன் வாக்குவாதம் செய்த விவசாயி கைது கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமாவளவனின் தம்பியுடன் வாக்குவாதம் செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த பள்ளக்காலிங்கராயநல்லூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று பாலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுவர் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தின் மீது மர்ம நபர்கள் பெயிண்ட் அடித்து அழித்துவிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அதே ஊரை சேர்ந்த பாண்டுரெங்கன்(வயது 60) என்ற விவசாயி, திருமாவளவனின் பிறந்த ஊரான அங்கனூரில் உள்ள தன்னுடைய நிலத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவன் என்பவர் அவ்வழியாக வந்தார். பாண்டுரெங்கன் தரப்பினர்தான் திருமாவளவனின் சுவர் விளம்பரத்தை அழித்திருப்பார்கள் என்று சந்தேகப்பட்ட செங்குட்டுவன், பாண்டுரெங்கனிடம் இது குறித்து கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த விவசாயிகள், இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பாண்டுரெங்கன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தளவாய் போலீஸ் நிலையத்தில் செங்குட்டுவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டுரெங்கனை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளக்காலிங்கராயநல்லூர் கிராம மக்கள் பாண்டுரெங்கன் மீது எந்த தவறும் இல்லை, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செந்துறை - அகரம்சீகூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதையறிந்து அங்கு வந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story