லஞ்ச வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணி நீக்கம்


லஞ்ச வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 1 Aug 2017 5:00 AM IST (Updated: 1 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவர் மொபட்டில் சென்றபோது, கடந்த 2000-ம் ஆண்டு ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் அவரை மடக்கி, மொபட்டை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மொபட்டை பெறுவதற்கு போலீஸ் ஏட்டு சாமிநாதன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிவாணன் அது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி மதிவாணன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சாமிநாதன் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து மதுவிலக்கு போலீஸ் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.அதைத்தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேகர் (கடலூர் கடலோர பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்), சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் (தற்போது ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர்), ரவி (தற்போது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்), ஏட்டுகள் சாமிநாதன், காதர் ஷெரீப், மாதமாணிக்கம், தங்கராஜன், மணி, சுந்தரம், ஜெயகோபால், ராஜூ உள்பட 22 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில், கடந்த மே மாதம் 23-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சேகர் (58), ஏற்காடு இன்ஸ்பெக்டர் அருள்முருகன் (50), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி(56), ஏட்டுகள் மாதமாணிக்கம் (66), சாமிநாதன் (66), காதர் ஷெரீப் (65), தங்கராஜன் (65) ஆகிய 7 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சேகர், அருள்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரை தவிர, மற்ற அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் தீர்ப்பு நகல் சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமாருக்கு கடந்த மாதம் 9-ந் தேதி கோர்ட்டு மூலம் கிடைத்தது. இதில் தண்டனை பெற்ற கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சேகர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஏற்காடு இன்ஸ்பெக்டர் அருள்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனாலும் உங்களை ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு டி.ஐ.ஜி. செந்தில்குமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இந்த நிலையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் அருள்முருகனை நேற்று பணிநீக்கம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவிட்டார். அதுபோல பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவியை பணிநீக்கம் செய்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தற்போது மருத்துவ விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story