கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோர்ட்டு ஊழியரிடம் சங்கிலி பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோர்ட்டு ஊழியரிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2017 2:00 AM IST (Updated: 2 Aug 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோர்ட்டு ஊழியரிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோர்ட்டு ஊழியரிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோர்ட்டு ஊழியர்

தூத்துக்குடி பனிமயநகரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவருடைய மனைவி செல்வம் (42). கோர்ட்டு ஊழியர். கணவன்– மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திற்கு சென்று விட்டு, இரவு 10 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்டினார். மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி கருப்பட்டி ஆபிஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், திடீரென கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்– மனைவி 2 பேரும் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 9 பவுன் சங்கிலியுடன் தப்பி சென்று விட்டனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story