மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 5:30 AM IST (Updated: 2 Aug 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி கோவையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

கோவை,

மருத்துவக்கல்லூரியில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) அடிப்படையில் மாணவ– மாணவிகளை உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் நக்கீரன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை செல்வராஜ் வரவேற்றார். இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடு முழுவதும் தனியார் மருத்துவ கல்லூரிகள் புற்றீசல் போன்று முளைத்துவிட்டன. இங்கு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் டாக்டராகி விடுகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில்தான் மருத்துவ படிப்பிற்கு குறைந்த பட்ச தகுதி கட்டாயம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. அதைத்தொடர்ந்துதான் தற்போது ‘நீட்’தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது.

அகில இந்திய அளவில் மருத்துவ கல்லூரியில் சேர ஒவ்வொரு மாநிலத்துக்கும் 15 சதவீத ஒதுக்கீடு உள்ளது. அந்த ஒதுக்கீடு பெற வேண்டும் என்றால் ‘நீட்’ தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். இதை நமது மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மாணவ– மாணவிகளுக்கு தெரியாமல் மறைத்துவிட்டனர்.

தற்போது அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,500 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3,500 இடங்களும் உள்ளன. இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்துவதில் தமிழக அரசு தலையிட முடியாது. ‘நீட்’தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும்போது, அரசு தாராளமாக தலையிடலாம். இதனால் ஆண்டுக்கு கல்லூரிகள் மூலம் 6 ஆயிரம் இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடு மூலம் 15 சதவீத இடங்களும் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு குறைந்தது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் டாக்டர்களாக வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுதிய 80 ஆயிரம் மாணவர்களில் 33 ஆயிரம் பேர் தகுதி பெற்று உள்ளனர். இந்த தேர்வால் கிராமப்புறத்தில் உள்ள ஏழை– எளிய மாணவர்களும் எளிதாக டாக்டர்களாக முடியும்.

எனவே மாநில அரசு, தேவையில்லாமல் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக்கோரி மத்திய அரசிடமோ, கோர்ட்டுக்கோ செல்லக்கூடாது. நீட் தேர்வை அரசியல் விளையாட்டாக கருதாமல், மாணவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சில அரசியல் கட்சிகளுக்கு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரையாகிவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story