பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடல் தகுதிதேர்வு
பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு நேற்று நடந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு நேற்று நடந்தது.
உடல்தகுதி தேர்வுதமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர்கள் பணியான போலீஸ், சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள், பெண் போலீஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு எழுத்து தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 27–ந் தேதி தொடங்கியது.
நெல்லை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 336 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர். அவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கடந்த 27–ந் தேதி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
பெண் போலீஸ்...இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெண் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் 1,450 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 1,000 பேருக்கு உடல்தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதற்கான அழைப்பு கடிதம் பெற்ற பெண்கள் தங்களது பெற்றோர்களுடன் நேற்று அதிகாலை 5 மணிக்கே மைதானம் அருகே வந்து விட்டனர். காலை 7 மணி முதல் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சிலர் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து இருந்தனர். அந்த குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்வுக்கு வந்தவர்களின் உயரம் மற்றும் மார்பளவு ஆகியவை அளக்கப்பட்டது. இந்த உடல்தகுதி தேர்வு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் முன்னிலையில் நடந்தது. இதைத்தொடர்ந்து ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தேர்வுகள் குழுகுழுவான நடந்தது.
கண்காணிப்பு கேமரா...பெண் போலீசாருக்கான உடல்தகுதி தேர்வையொட்டி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைதானத்திற்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் மைதானம் மழைநீரும், சகதியுமாக இருந்தது. இதை தீயணைப்பு படைவீரர்கள் வந்து அகற்றினார்கள்.