கதிராமங்கலத்தில் 21-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


கதிராமங்கலத்தில் 21-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 21-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜாமின் சான்றிதழில் கையெழுத்திட கோரி கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட முயன்றனர்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 21-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அண்ணாதுரை என்பவர் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் இரண்டு கைகளால் தங்களது கண்களை மூடியபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட பாதிப்பை கண்டித்து தான் போராட்டம் நடத்தினோம். அதற்காக பொய் வழக்கு போட்டு 10 பேரை கைது செய்துள்ளனர். ஒரு மாதம் ஆகியும் வரை அவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் கதிராமங்கலம் பிரச்சினைக்கான காரணம் என்ன என்பதை தெரியாமல் யாரோ தூண்டிவிடுகிறார்கள். அதனால் தான் மக்கள் போராடுகிறார்கள் என கூறி கண் மூடிதனமாக நடந்து கொள்கிறது. இதை கண்டித்து தான் நாங்கள் இத்தகைய போராட்டத்தை நடத்துகிறோம் என்றனர்.

இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு வந்து கைது செய்யப்பட்டவர்களுக்கான ஜாமின் சான்றிதழில் கையெழுத்திட கோரி கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாமின் சான்றிதழில் கையெழுத்திடுவதாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ்பாபு உறுதியளித்தார். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற மக்கள் அய்யனார் கோவில் தோப்பிற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story