பக்தர்கள் சென்ற ஆம்னி பஸ் ஏரியில் கவிழ்ந்தது 48 பேர் படுகாயம்


பக்தர்கள் சென்ற ஆம்னி பஸ் ஏரியில் கவிழ்ந்தது 48 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே பக்தர்கள் சென்ற ஆம்னி பஸ், ஏரியில் கவிழ்ந்தது. இதில் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

முத்துப்பேட்டை,

கேரள மாநிலம் கோலா மாவட்டம், சீனிவாசபுரம் தாலுகா மல்லிபார்பட்டி பகுதியை சேர்ந்த 48 பேர் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ஆம்னி பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் பாவாஜா என்பவர் ஓட்டினார். நேற்றுமுன்தினம் காலை இவர்கள் ராமேஸ்வரம் சென்றனர். பின்னர் மாலை வரை அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு இரவு, திருநள்ளாறு கோவிலில் தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் பஸ் நேற்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மங்கலூர் கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பட்டுக்கோட்டை நோக்கி மீன் ஏற்றி சென்ற லாரி வந்தது. அதன் மீது மோதமால் இருப்பதற்காக ஆம்னி பஸ் டிரைவர் பாவாஜா, பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மங்கலூர் பெரிய ஏரியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த நாராயணசாமி, முனிவெட்டி, பார்வத்தம்மாள், கிருஷ்ணம்மாள், வெங்கட்ராமர், ஆட்சியப்பா, ராமையா, அஞ்சம்மாள், தில்லையம்மாள், மீனாட்சிஅம்மாள், ரெத்தினம்மாள் ஆகிய 11 பேர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 37 பேரும் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story