மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது; பி.யூ. கல்லூரி மாணவர் பலி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா மோக சின்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரா(வயது 17).
கோலார் தங்கவயல்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா மோக சின்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரா(வயது 17). இவர் பாகேபள்ளி டவுனில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் அவர் கல்லூரி முடிந்து ஒரு ஷேர் ஆட்டோவில் பாகேபள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை டிரைவர் சேகர் ஓட்டினார். ஆட்டோவில் நரேந்திராவுடன் மேலும் 5 பேர் இருந்தனர். அவர்கள் எல்லம்பள்ளி கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சாலையின் குறுக்கே வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சேகர் ஆட்டோவை நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த நரேந்திரா, முனியம்மா, சசிகலா, சிவம்மா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் உள்பட 3 பேர் காயமின்றி தப்பினர். விபத்தை பார்த்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாகேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் நரேந்திரா மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து பாகேபள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.