சம்பள உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
சம்பள உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள சிறு விவசாயிகள் மட்டுமே பச்சை தேயிலையை வழங்க முடியும். மஞ்சூர், எடக்காடு, இத்தலார், கூடலூர், கட்டபெட்டு உள்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வினியோகம் செய்யும் பச்சை தேயிலையை அரைத்து, தூளாக்கி, டீசர்வ் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு மாத விலை, வார விலை வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.288 வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்றும், தொழிலாளர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கக்கோரி தொழிற்சங்கங்கள் மூலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் போராட்டங்கள் நடைபெற்றும் முடிவு ஏற்பட வில்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகமான இன்கோசர்வ் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. முற்றுகை போராட்டத்தில் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளில் விவசாயிகளிடம் இருந்து பச்சைதேயிலை கொள்முதல் செய்யப்படுவது இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.