குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கே.கொத்தூர் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தண்ணீரும் வழங்கப்படவில்லை. இதனால் கே.கொத்தூர் பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏரியில் இருந்து எடுத்து வரும் நீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் கிராம மக்கள் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் குடிநீர் கேட்டு நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story