மதுக்கடை மீது சாணியை கரைத்து ஊற்றிய பெண்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்


மதுக்கடை மீது சாணியை கரைத்து ஊற்றிய பெண்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே நேற்று திறக்கப்பட்ட மதுக்கடை மீது சாணியை கரைத்து பெண்கள் ஊற்றினர். மேலும் அவர்கள் கடை முன்பு தர்ணா போராட்டமும் நடத்தினர்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கன்னிமார்கோவில் பிரிவு ரோடு உள்ளது. அந்த ரோட்டின் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக புதியதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வந்தது. இதனை அறிந்த அப்பகுதியினர் அந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்த நிலையில் திடீரென நேற்று மாலை அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கியது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் திடீரென அந்த கடையின் முன்பு திரண்டு வந்து தாங்கள் கொண்டு வந்த சாணியை கரைத்து கடையின் மீது ஊற்றினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிச்சென்று விட்டனர். அதன்பின்பு பொதுமக்கள் தரப்பில் அந்த கடைக்கு மேலும் ஒரு பூட்டு போடப்பட்டது.அதன் பின்பு அனைவரும் கலைந்து சென்றால் மீண்டும் மதுக்கடை செயல்படலாம் என கருதிய பெண்கள் கடை முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் நேற்று இரவு 9 மணி வரை நீடித்தது. அதை தொடர்ந்து பேளுக்குறிச்சி போலீசார் அங்கு வந்து சமதானம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. 

Related Tags :
Next Story