டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த சுண்டமேடு பகுதியில் நேற்று முன்தினம் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்றுகாலை 10 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் தங்கவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பொதுமக்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்றும் இந்த பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் எனவே, வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்றும் கூறினர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சென்று மனு அளித்தும், அதையும் மீறி தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்ததாக கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு துணை தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதற்கு பொதுமக்கள் அதுவரை டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றும் கூறினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story