அங்கன்வாடி மையத்தில் சத்து மாவு மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது: உணவு பாதுகாப்பு அலுவலர் நேரில் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் சத்து மாவு மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது: உணவு பாதுகாப்பு அலுவலர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அவனம்பட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான சத்துமாவு மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நேரில் ஆய்வு நடத்தினார்.

திண்டிவனம்,

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தென்பசியார் ஊராட்சி அவனம்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 25–க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வாணிஸ்ரீ என்பவர் மையத்தின் பொறுப்பாளராகவும், மற்றொருவர் உதவியாளராகவும் உள்ளார்.

இந்த மையத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான சத்து மாவு மாதந்தோறும் மரக்காணம் ஒன்றிய மையம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு வேலை முடிந்து மையத்தை பூட்டி விட்டு வாணிஸ்ரீ அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வாணிஸ்ரீ மையத்திற்கு வந்தார். அப்போது, மையத்தின் முன் பகுதியில் திறந்தவெளியில் குழந்தைகளுக்கான சத்துமாவு மூட்டைகள் கிடந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் முற்றிலுமாக நனைந்து, ஈ மொய்த்த நிலையில் இருந்தது.

பின்னர் மழையில் நனைந்து சேதமான மூட்டையில் இந்த மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்க பயன்படும் 275 கிலோ மாவும் உள்ளதா? என அவர் சோதனை செய்தார். அதில் 8 மூட்டைகளில் 200 கிலோ மாவு மட்டும் இருந்ததும். மீதம் உள்ள 75 கிலோ எடை மாவிற்கான 3 மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மரக்காணம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள், ஒவ்வொரு மாதமும் சத்து மாவு மூட்டையை இறக்க வருபவர்கள் மையத்தின் பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்காமல், அங்கன்வாடி மையத்திற்கு வெளியே இறக்கி வைத்து விட்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணத்தினால், சத்து மாவு மூட்டைகள் மழையில் நனைந்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.

அவனம்பட்டு அங்கன்வாடி மையத்தில் உணவு பொருட்களை இருப்பு வைப்பதற்கு, தேவையான இட வசதிகள் இருந்தும் கவனக்குறைவாக திறந்த வெளியில் இறக்கி வைத்து விட்டு சென்றதால் மழையில் நனைந்து குழந்தைகளுக்கான சத்துமாவு மூட்டைகள் வீணாகி இருப்பதுடன், மர்ம நபர்களால் மூட்டைகள் திருடும் போய் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story