திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்தில் விநாயகர் சிலை திருட்டு
திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. இது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வக்கீல்கள் சார்பில் கோர்ட்டு வளாகத்தில், சிறிய விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பீடத்தில் 1½ அடி உயரத்தில் கல்லால் ஆன விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
தற்போது அதே இடத்தில் புதிதாக கோவிலும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே தினமும் வேலைக்கு வரும் பெரும்பாலான கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த வக்கீல்கள், விநாயகர் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிலை இருந்த இடத்தில் ஒரு மாலை மட்டும் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து சிலையை திருடி சென்றுள்ளனர்.
வருகிற 25–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் வைப்பதற்காக சிலையை திருடி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. விநாயகர் சிலையை திருடி கொண்டு வந்து வைத்தால்தான் நிலையாக இருக்கும் என்ற ஐதீகம் உள்ளது. அதன்படி சிலை திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.