நெய்வேலியில் 22 நாட்களாக நடந்து வந்த என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
நெய்வேலியில் 22 நாட்களாக நடந்து வந்த என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் மாவட்ட கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் தவிர 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்துக்கு 26 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நிலக்கரி சுரங்கம் 1 ஏ–வில் மின்னியல் மற்றும் எஸ்.எம்.டி. பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் 19 ஆக குறைக்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் திடீரென அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாதத்துக்கு 26 நாட்கள் பணி வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக புதுச்சேரியில் 2 கட்டங்களாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கடந்த 31–ந்தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியபோது போலீசார் தடியடி நடத்தினர். இப்போராட்டத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயாவும், கலெக்டரும் தனித்தனியாக என்.எல்.சி. அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா மற்றும் கலெக்டர் ராஜேஷ் ஆகியோர் தனித்தனியாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் என்.எல்.சி. அதிபருடன் கலெக்டர் ராஜேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து கலெக்டர் ராஜேஷ், தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் 26 நாட்கள் வேலை வழங்கப்படும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது என்.எல்.சி. நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்காது என்று கலெக்டர் உறுதி அளித்தார். அவரது உறுதிமொழியின் பேரில் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதனால் கடந்த 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.