பொன்னை ஆற்றில் கள்ளத்தொடர்பால் கட்டிட மேஸ்திரி கொன்று புதைப்பு மாமனார் உள்பட 2 பேர் கைது
கள்ளத்தொடர்பால் கட்டிட மேஸ்திரி கொன்று பொன்னை ஆற்றில் புதைக்கப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
கள்ளத்தொடர்பால் கட்டிட மேஸ்திரி கொன்று பொன்னை ஆற்றில் புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக மாமனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட மேஸ்திரி கொலைவேலூர் மாவட்டம், லத்தேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரசமங்கலம் அருகே உள்ள கீழ்ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 32), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி குப்பு. இவர்களுக்கு கார்த்தி (12), திவாகர் (11) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4–ந் தேதி பழனி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பழனியின் தாயார் லட்சுமி லத்தேரி போலீசில் தனது மகன் மாயமானதாக ஜனவரி மாதம் 9–ந் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பழனியின் மாமனார் சுந்தரேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுந்தரேசனும், சிங்கார ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (42) என்பவரும் சேர்ந்து பழனியை கொலை செய்து, உடலை பொன்னை அருகே உள்ள பொன்னை ஆற்றில் புதைத்தது தெரியவந்தது.
உடல் தோண்டி எடுப்புஇதையடுத்து லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், சப் –இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் போலீசார் சுந்தரேசன், சேகர் ஆகியோரை அழைத்துக்கொண்டு பொன்னை அருகே கீரைசாத்து பகுதிக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் பொன்னை ஆற்றில் பழனியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை இருவரும் அடையாளம் காட்டினர்.
அதைத் தொடர்ந்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, மேல்பாடி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கீரைசாத்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் நரேந்திரகுமார், கலைச்செல்வி மற்றும் போலீசார் முன்னிலையில் பழனியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கள்ளத்தொடர்புகொலை செய்யப்பட்ட பழனிக்கும், சுந்தரேசனின் 3–வது மனைவி காசியம்மாள் (37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், மேலும் பழனியின் மனைவி குப்புவுக்கும், சேகருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து பழனியை கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்து வரும் வழியிலேயே, பொன்னையில் மண்வெட்டி வாங்கிக் கொண்டு கீரைசாத்து பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் பழனியின் லுங்கியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து, மண்வெட்டியால் பள்ளம் தோண்டி உடலை புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மாமனார் உள்பட 2 பேர் கைதுஇதையடுத்து லத்தேரி போலீசார் சுந்தரேசன், சேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.