தலைமை ஆசிரியை வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி
பள்ளி தலைமை ஆசிரியையிடம் வங்கி அதிகாரி பேசுவதாகக்கூறி ஏ.டி.எம். எண்ணை பெற்று அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.97 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
திருப்பத்தூரை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் வங்கி அதிகாரி பேசுவதாகக்கூறி ஏ.டி.எம். எண்ணை பெற்று அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.97 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்து அதிகாரிகள் பேசுவதாகக்கூறி ஏ.டி.எம். எண் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை பெற்று அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்யும் சம்பவம் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதனால் இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் தலைமை ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.97 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் சிவகாமி (வயது 52). வாணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த 31–ந் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி சிவகாமியின் ஏ.டி.எம் எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். அவரும் ஏ.டி.எம். எண்ணை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் சிவகாமியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.53 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சிவகாமியின்செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.உடனே வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வங்கியில் இருந்து ரகசிய எண்ணை யாரும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த நாள் ரூ.44 ஆயிரம் எடுத்ததாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகாமி நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.