கோவில் தேரோட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேரோட்டம் 6–ந் தேதி நடைபெற உள்ளது.
குடியாத்தம்,
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேரோட்டம் 6–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் செல்வராசு தலைமை தாங்கினார். தாசில்தார் நாகம்மாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் தனஞ்செயன், பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாக அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் தேர் செல்லும் பாதைகளில் மின்சாரத்தை நிறுத்துவது, இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவது, சாலைகளை சீரமைப்பது, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, மாலை 6 மணிக்குள் தேர்நிலையை அடைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மின்வாரிய செயற் பொறியாளர் வெங்கடாசலபதி, வணிகர் பேரமைப்பு தலைவர் கிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.