காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு பலிக்காது திருநாவுக்கரசர் பேட்டி


காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு பலிக்காது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

அறச்சலூர்,


சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. அங்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து தீரன்சின்னமலை போராடினார். அவர் 4 போர்களில் ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டு ஓட வைத்து சுதந்திர போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சி செய்து கொன்றதுபோல் தீரன் சின்னமலையையும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் தூக்கிலிட்டு கொன்றுவிட்டனர்.


காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராடி உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் உள்பட தியாக தலைவர்கள் பல ஆண்டு சிறைவாசம் சென்று சுதந்திரத்தை பெற்று தந்துள்ளனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வை உடைப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதுகாத்து வந்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவது ஆகிய பணிகளில் பா.ஜ.க.வின் தலையீடு உள்ளது. பல கூறுகளாக அ.தி.மு.க. பிரிந்து இருப்பதை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்த தேர்தலில் ஓட்டளிப்பதற்கு முன்பு தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நிர்ப்பந்தம் செய்து இருக்கலாம்.


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இந்த சட்டமசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு வரவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார்.

கொடநாடு எஸ்டேட் தற்போது யாரிடம் உள்ளது என்று தெரியவில்லை. அந்த சொத்துக்களை மத்திய அரசு எடுத்துவிட்டதா? அல்லது வருமானவரித்துறையிடம் உள்ளதா? என்று தெரியவில்லை. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. நினைக்கிறது. இதேபோல் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் சிந்தனையில் பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது. இந்த கனவு பலிக்காது. பா.ஜ.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


ஜெயலலிதா சினிமா துறையில் இருந்தபோது சம்பாதித்த போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் பார்வைக்கு திறந்துவிட வேண்டும். மற்ற சொத்துக்களை வேண்டுமானால் வாரிசு அடிப்படையிலும், கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் பிரித்துக்கொள்ளட்டும். ஆனால் போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு சின்னமாக அறிவித்து மக்களின் பார்வைக்கு விட வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.


Next Story