ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் களையிழந்தது ஆடி பெருக்கு விழா ஊற்று தோண்டி பெண்கள் சிறப்பு பூஜை
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. ஆறுகளில் ஊற்று தோண்டி பெண்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
முசிறி,
தமிழகமெங்கும் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. மற்ற மாவட்டங்களை விட திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இப்பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. அதேபோல திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
இதேபோல முசிறியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. அப்போது பெண்கள் காவிரி ஆற்றில் ஊற்று தோண்டி அதில் தேங்கிய தண்ணீரை தொட்டு வணங்கி காவிரி தாய்க்கு தேங்காய், பழங்கள், கரும்பு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, வெல்லம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அப்போது சுமங்கலி பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும், திருமணமாகாத இளம்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் காவிரி அன்னையை வேண்டிக் கொண்டனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், புதுமணத் தம்பதிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த கல்யாண மாலைகளை அங்கு தேங்கி நின்ற சிறிது தண்ணீரில் விட்டு காவிரி தாயை வழிபட்டனர். விவசாயிகள், இந்த ஆண்டாவது போதிய மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆடிப்பெருக்கையொட்டி முசிறி, சிட்டிலரை, தும்பலம், சூரம்பட்டி, சேருகுடி, தா.பேட்டை, மங்கலம், வாளவந்தி, ஜெம்புநாதபுரம், மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்திருந்து காவிரித்தாயை வழிபட்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தேங்கியிருந்த மழைநீரை தலையில் தெளித்துக் கொண்டு பூஜைகள் செய்தனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குளிக்க முடியாமல் விரக்தி அடைந்தனர்.
முக்கொம்பு சுற்றுலா தலம் வெறிச்சோடியதுதிருச்சி அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலா மையத்தில் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் திருச்சி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிப்பதுடன் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுகளை குடும்பம், குடும்பமாக அமர்ந்து உண்டு மகிழ்வார்கள்.
நேற்று ஆடி பெருக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரையே அதிகம் காண முடிந்தது. மதியத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்து இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் நேற்று வந்தவர்களின் எண்ணிக்கை பாதியளவு தான் இருந்தது. அவர்கள் வறண்டு கிடந்த மணல் பரப்பில் சிறிதுதூரம் நடந்து சென்றனர். சிறுவர்கள் அங்குள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.