சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி இறந்தார். இதற்கு காரணமான குற்றவாளியை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே பரவை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடத்துவதற்காக, மின் விளக்கு அமைப்பதற்கான சாரம் கட்டும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாரம் திடீரென சரிந்து விழுந்ததில் ஓட்டத்தட்டை மதகடி பகுதியை சேர்ந்த தொழிலாளி தனபால் என்பவர் உயிரிழந்தார். மேலும் பிரதாமராமபுரம் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் வலது காலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், வேளாங் கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பரவை பகுதியில் சாரம் சரிந்து விழுந்த விபத்துக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story