ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கு: போலீஸ் விசாரணைக்கு அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும்


ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கு: போலீஸ் விசாரணைக்கு அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:30 AM IST (Updated: 4 Aug 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தநல்லூரில் ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கும்பகோணத்தில் ஆணையர் வீரசண்முகமணி கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், மூன்று கால பூஜை முறைகள், அன்னதானம் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு நேற்று வந்தார். பின்னர் அவர் தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டை அருகே உள்ள புள்ளமங்கை சிவன்கோவில், பட்டீஸ்வரம் காசிவிஸ்வநாதர் கோவில், கோபிநாதபெருமாள்கோவில், திருமேற்றழிகை ராமலிங்கசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில், பஞ்சவன்மாதேவி கோவில், வழுத்தூரில் உள்ள கரைமேல் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி, அன்னதான திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்து அன்னதான திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, புனரமைப்பு பணிகள், அன்னதான திட்டங்கள் குறித்தும் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கும்பகோணத்தில் ஆணையர் வீரசண்முகமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், மூன்றுகால பூஜை முறைகள், அன்னதான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருவிடைமருதூர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயமானது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. போலீசார் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு அறநிலையத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர்கள் ஞானசேகரன், ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Related Tags :
Next Story