சோலார் பேனல் மோசடி வழக்கு: உம்மன் சாண்டிக்கு தண்டனை கிடைப்பது உறுதி சரிதாநாயர் பேட்டி


சோலார் பேனல் மோசடி வழக்கு: உம்மன் சாண்டிக்கு தண்டனை கிடைப்பது உறுதி சரிதாநாயர் பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2017 5:00 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று சரிதா நாயர் கூறினார்.

கோவை,

கேரளாவில் சோலார் பேனல் அமைத்துக்கொடுப்பதாக மோசடியில் சிக்கியவர் சரிதா நாயர். இவர் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கும் சோலார் பேனல் மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே கோவையை அடுத்த வடவள்ளியில் சரிதா நாயர் அவருடைய முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து காற்றாலை அமைத்து கொடுக்கும் நிறுவனத்தை தொடங்கினார்கள். அங்கு ரவி என்பவர் மேலாளராக இருந்தார்.

இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கோவையை சேர்ந்த 3 பேரிடம் காற்றாலை அமைத்துக்கொடுப்பதாக ரூ.31 லட்சம் பெறப்பட்டது. பின்னர் காற்றாலை அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரிதாநாயர், மேலாளர் ரவி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் கோர்ட்டை விட்டு வெளியே வந்த சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் இருந்து எனக்கு மிரட்டல் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. இருந்தபோதிலும் அதை நான் சமாளித்து வருகிறேன். இந்த வழக்கு விரைவில் முடியக் கூடியது. பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகாததால் தான் இன்னும் முடியவில்லை.

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடியில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளதோ அதுதொடர்பான சி.டி.யை விசாரணை கமிஷனிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் அதுதொடர்பாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். இன்னும் 2 மாதத்துக்குள் அரசிடம் சமர்ப்பித்து விடுவார்கள்.

இந்த விசாரணை நேர்மையாக நடந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், ஒரு புகார் மனு கொடுத்தேன். அதன் பின்னர்தான் திருவனந்தபுரத்தை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

எனவே பினராயி விஜயன் அரசு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தண்டனை கிடைப்பது உறுதி. மேலும் இந்த மோசடி வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்த ஆவணங்களையும் நான் சமர்ப்பித்து உள்ளேன்.

நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் எனக்கு நண்பர்கள் தான். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story