ஆடிப்பெருக்கையொட்டி சுமங்கலி பூஜை செய்து பெண்கள் வழிபாடு


ஆடிப்பெருக்கையொட்டி சுமங்கலி பூஜை செய்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கையொட்டி சுமங்கலி பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை கோவில் எதிரே முல்லைப்பெரியாறு ஓடுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி கம்பம், சின்னமனூர், தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் காளாத்தீஸ்வரர் கோவிலில் நேற்று குவிந்தனர்.

பின்னர் அவர்கள், முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் பச்சரிசி மாவில் அம்மன் சிலை செய்தனர். இதைத்தொடர்ந்து சுமங்கலி பூஜை, கங்காதேவி பூஜை செய்து வழிபட்டனர். மேலும் புதிய மாங்கல்யத்தை பெண்கள் அணிந்து கொண்டனர். ஆற்றில் விளக்கு விட்டு வழிபாடு செய்தனர். குறிப்பாக புதுமண தம்பதிகள், அதிகம் பேர் வந்திருந்து பூஜையில் பங்கேற்றனர்.

விபூதி குகைக்கோவில்

இதேபோல் காளாத்தீஸ் வரர் கோவிலில் அர்ச்சகர் நீலகண்டசிவாச்சாரியார் தலைமையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஸ்நிலையத்தில் இருந்து முல்லைப்பெரியாற்றங்கரை வரை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுருளி அருவியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுருளிவேலப்பர் கோவில், விபூதி குகைக்கோவில், ஆதிஅண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

பெட்டி தூக்குதல் நிகழ்ச்சி

இதேபோல் தேனி அருகே வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர். பழனிசெட்டிபட்டியில் தண்ணீர் தொட்டி அருகிலும் பெண்கள் பலர் சிறப்பு வழிபாடு செய்து, புது மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். அதேபோன்று கம்பம், பெரியகுளம், போடி, உப்புக்கோட்டை பகுதிகளிலும் ஆற்றங்கரை பகுதிகளில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக பெண்கள் குவிந்தனர்.

தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலதெய்வம் கோவில்களில் மக்கள் வழிபாடு நடத்தினர். இந்த பகுதிகளில் பெட்டி தூக்குதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெட்டி தூக்குதல் என்பது மூங்கில் பெட்டிகளை அருகில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு சென்று, அங்கு அதற்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து வழிபடுவது ஆகும்.

அதன்படி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு உகந்த நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

Related Tags :
Next Story