தீ விபத்து: 7 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம்


தீ விபத்து: 7 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமானது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

வலங்கைமான்,

வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் சந்திரன். நேற்று காலை இவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள சேகர், தியாகராஜன், வள்ளி, முருகேசன், ரவி, மகாலிங்கம் ஆகிய 6 பேரின் கூரை வீடுகளுக்கும் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான், பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் 7 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் 7 வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், குடும்ப அட்டைகள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகங்கள், மோட்டார் சைக்கிள்கள், துணிகள் ஆகியவை எரிந்து சாம்பலானது. மேலும் இந்த தீவிபத்தில் சேகரின் மகன் சுபச்செல்வம் (வயது 21) என்பவர் நெல் விற்று வைத்திருந்த ரூ.6 லட்சமும், தங்க நகைகளும் தீயில் கருகியது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் என தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் இஞ்ஞாசிராஜ் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், வேட்டி-சேலை, மண்எண்ணெய், அரிசி ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சங்கர், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

Related Tags :
Next Story