மாணவ-மாணவிகளின் வசதிக்காக அந்தந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்


மாணவ-மாணவிகளின் வசதிக்காக அந்தந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக அந்தந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் பாலக்கரை அருகே கலெக்டர் அலுவலக சாலையில் அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்ட வழிகாட்டி நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா, பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்தார். இதன் விளைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளின் அலைச்சலை தவிர்க்கவும், காலநேரம் வீணாகுவது, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த பள்ளியிலேயே அரசு பொதுத்தேர்வு எழுத தேர்வு மையம் அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் எத்தகைய போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கேள்வி, பதில்கள் அடங்கிய வினா, விடை புத்தகம் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள். பொதுவாழ்வில் மக்களின் மனதில் எம்.ஜி.ஆர். நீங்கா இடம் பிடித்தது பற்றியும், அவரது புகழை பறைசாற்றும் வகையிலும் குறும்படம் திரையிடப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியோடு பார்த்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமசந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story