8 மாதங்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் பரிசல் போக்குவரத்து தொடங்கியது


8 மாதங்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் பரிசல் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் வட்டாரத்தில் 8 மாதங்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் பரிசல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஜேடர்பாளையம், கண்டிபாளையம், வடகரையாத்தூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் இருந்து அந்தந்த ஊராட்சிகள் மற்றும் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பரிசல்துறை ஏலம் விடப்படுகிறது. இதில் ஒரு ஆண்டு நாமக்கல் மாவட்டத்திலும், மறு ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஏலம் விடப்பட்டு வருகிறது.

ஜமீன்இளம்பள்ளியில் இருந்து எதிர்கரையான ஈரோடு மாவட்டம் பழனிகவுண்டனூரையும், ஜேடர்பாளையத்தில் இருந்து கருவேலம்ப ாளையத்தையும், கண்டிபாளையத்தில் இருந்து ஊஞ்சலூரையும், ஐய்யம்பாளையத்தில் இருந்து வெங்கம்பூரையும், பிலிக்கல்பாளையத்தில் இருந்து கொடுமுடியையும் இணைக்கும் வகையில் இந்த பரிசல் போக்குவரத்து நடக்கிறது.

பரமத்திவேலூர் பகுதியில் இருந்து எதிர்கரையான ஈரோடு மாவட்டத்திற்கு தினந்தோறும் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சாலை வழியாக செல்ல வேண்டுமானால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த பரிசல் போக்குவரத்து பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக காவிரியில் நீர்வரத்து இல்லாததால், ஆறு வறண்டது. இதனால் ஏலம் எடுத்தவர்களில் சிலர் காவிரி ஆற்றின் குறுக்கே அதிக செலவில் மண்பாதை அமைத்து வசூல் செய்து வந்தனர். ஆனால், செலவுக்கு ஏற்ப போதிய வருவாய் இல்லை என்றும், பல லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பரிசல்கள் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள பரிசல்துறைகளில் இருந்து பரிசல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதுகுறித்து பரிசல்துறையை ஏலம் எடுத்தவர்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து உள்ளதால் தற்போது பரிசல் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதனால் வருவாய் அதிகரித்து உள்ளது என்றனர். பரிசல் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Related Tags :
Next Story