சாலையை அகலப்படுத்துவதற்காக தேனி எம்.ஜி.ஆர். நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையை அகலப்படுத்துவதற்காக தேனி எம்.ஜி.ஆர். நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

சாலையை அகலப்படுத்துவதற்காக தேனி எம்.ஜி.ஆர். நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் 50 வீடுகளின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன.

தேனி,

தேனி நகரில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு படிக்கட்டுகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், நிழற்கூடம் அமைத்தல் போன்று ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகின்றன. இத்தகைய ஆக்கிரமிப்புகளால் சாலையின் அகலம் குறைந்து விடுகின்றன.

அந்த வகையில் தேனி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகளின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. சாலையின் அகலம் குறுகியதாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர். கழிவுநீர் வடிகால்களை தூர்வார முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது குறித்து அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் படிக்கட்டுகள், மாடிப்படிக்கட்டுச் சுவர்கள், திண்ணைகள், பெட்டிக்கடைகள் போன்றவை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் 50–க்கும் மேற்பட்ட வீடுகளில் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. மேலும் இதுபோல், நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி எம்.ஜி.ஆர். நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் போது சமதர்மபுரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் நுழையும் பகுதியில் இருந்த ஒரு மரம் வேருடன் சாய்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிழல் கொடுத்து வந்த மரம் சாய்க்கப்பட்டதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பொதுமக்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இடிக்கப்பட்ட கட்டிடங்கள், படிக்கட்டுகள் போன்றவை சாலையிலேயே போடப்பட்டு உள்ளன. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு கூட சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இவற்றை அப்புறப்படுத்தி சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story