ஆம்பூரில் காமராஜ் பவன் அறக்கட்டளை கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்


ஆம்பூரில் காமராஜ் பவன் அறக்கட்டளை கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் காங்கிரஸ் – த.மா.கா. பிரச்சினையால் காமராஜ் பவன் அறக்கட்டளை கட்டிடத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் ரெயில் நிலையம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஸ்தாபன காங்கிரஸ் காமராஜ் பவன் அறக்கட்டளை கட்டிடம் உள்ளது. சுதந்திர போராட்ட இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம்பூரை சேர்ந்த இளையபெருமாள் என்பவர் தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு தானமாக வழங்கினார். அதன்பிறகு அந்த சொத்தை பராமரித்து வருவதற்காக ஸ்தாபன காங்கிரஸ் காமராஜ் பவன் அறக்கட்டளை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதில் வணிகவளாகம் கட்டப்பட்டு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

இதனால் ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகள், அது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என கூறினர். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த கட்டிடத்திற்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர். பின்னர் திருப்பத்தூர் சார் ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில் அறக்கட்டளை நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டில் ‘சீல்’ வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் அறக்கட்டளை நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் தாசில்தார் மீராபென்காந்தி, கட்டிடத்தின் சீலை அகற்றினார். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகள் அங்கு ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அறக்கட்டளை தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான கே.குப்புசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த கட்டிடத்தை அறக்கட்டளை நிர்வாகம் பராமரித்து மேம்படுத்தி வருகிறது. கட்டிடத்திற்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும் சம்மந்தம் கிடையாது. ஆனால் இதனை நிர்வாகம் செய்வது அறக்கட்டளை நிர்வாகத்தினர் மட்டுமே. இதன்மூலம் வரும் வருமானத்தை அனைத்தையும், காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் என கட்சி பாகுபாடு பார்க்காமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்’ என்றார்.

அப்போது நகர தலைவர் தட்சிணாமூர்த்தி, த.மா.கா.வை சேர்ந்த ரபீக்அஹமத், விஜயன், சண்முகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story