தாராபுரம் பகுதியில் மழை அளவு குறைந்ததால் அமராவதி பாசனத்திற்கு ஆபத்து
தாராபுரத்தில் மழை அளவு குறைந்ததால் அமராவதி பாசனத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணையின் தண்ணீர் மூலம் தாராபுரம் பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பிறகு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக 1 போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டது. அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து போனதால், கடந்த 2 ஆண்டுகளாக நெல் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அமராவதி பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் விவசாயம் இன்றி காய்ந்து கிடக்கிறது. தற்போது நஞ்சை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவருகிறது. விவசாயத்தை நம்பி இருந்த விவசாயிகள் கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இதுவரை நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால், விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி அமராவதி ஆற்றில் தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. காரணம் அணையில் இருப்பு இருந்த தண்ணீரை குடிநீர் தேவைக்காக வழங்கிவிட்டனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
ஒருவேளை மழை அளவு குறைந்தாலோ அல்லது பெய்யாமல் போனாலோ, குடிநீர் தேவைக்கு கூட அணையிலிருந்து தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. இங்குள்ள குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. இதுதான் உண்மை நிலை. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிப்பது வழக்கம்.
அதன்படி பார்த்தால் தற்போது 2 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை கூட பெய்யவில்லை. அமராவதி அணைக்கும் நீர்வ ரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது சராசரி அளவைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவாக பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது இன்னும் 2 மாதத்தில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக இந்த பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கு நிலத்தடி நீர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், குறையாமல் காப்பதற்கும் கண்டிப்பாக பாசனம் நடைபெறவேண்டும்.
பாசனம் என்பது உணவு உற்பத்திக்காக மட்டும் அல்ல. அதில் பல்வேறு மேம்பாடுகள் உள்ளடக்கி இருப்பதையும் கவனிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அமராவதி பாசனத்திற்கு சரியான நீர் நிர்வாகம் தேவைப்படுகிறது. எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் அணைக்கு வரும் தண்ணீரை எதற்கு பயன்படுத்த வேண்டும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளை கொண்டு ஆலோசிக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளை கொண்டு ஆலோசிக்க கூடாது என்பது பலருடைய கருத்து.
இந்த ஆண்டு மழை அளவு குறைவதால் அமராவதி பாசனத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் விவசாயிகள் குடிபெயரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறைந்த நீர் ஆதாரத்தில் எவ்வாறு வேளாண் உற்பத்தியை மேற்கொள்வது என்பதை, வேளாண்துறை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கான பயிர்கள் என்ன என்பதை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை பெயர் அளவில் இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு விவசாயிக்கும் சென்றடையும் வகையில் இது இருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோள் ஆகும்.