அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, டிராக்டர் பறிமுதல்

தோகைமலை,

தோகைமலை அருகே கழுகூர் பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மணல் கடத்துவதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கழுகூரில் தோகைமலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், கழுகூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஆற்று மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அப்போது நாகனூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது டிராக்டர் டிப்பரில் குளித்தலை அருகே உள்ள தாளியம்பட்டியில் இருந்து காவிரி ஆற்று மணலை அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜின் டிராக்டர் மற்றும் டிப்பரை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக குளித்தலை கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியில் தோகைமலை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், சீனிவாசநல்லூரில் இருந்து காவிரி ஆற்று மணலை அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு மணப்பாறை பகுதிக்கு சென்றது தெரிந்தது. இதையடுத்து மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தொட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜசேகர்(வயது 22) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story