கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் 4 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டிபுதூரில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகம் முன்பாக அந்த பகுதிக்கு குடிநீர் செல்லும் பொது குழாய் உள்ளது. அதன் அருகில் பச்சுடையாம்பட்டிபுதூரை சேர்ந்த மூன்று பேரும், காந்திபுரத்தை சேர்ந்த ஒருவரும் மண் அள்ளுவதற்காக குழி தோண்டினர்.
அப்போது குடிநீர் குழாய் சேதம் அடைந்து விடும் அதற்கு முன்பாக அங்கு குழி தோண்ட வேண்டாம் என்று கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் அவர்களை தடுத்து உள்ளனர். அதை அவர்கள் கேட்கவில்லை.
4 பேர் கைதுஅப்போது பச்சுடையாம்பட்டிபுதூரை சேர்ந்த வேலுசாமி (வயது 25), கணேசன் (30), பெரியசாமி (32), காந்திபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ஆனந்தன் (24), ஆகிய 4 பேரும் குடிநீர் குழாயை சேதப்படுத்தியதுடன் கிராம நிர்வாக அலுவலரையும் அவரது உதவியாளரையும் மண்வெட்டியால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.