குடும்பம் நடத்த வரமறுத்ததால் பெண்ணின் காது அறுப்பு; கணவர் கைது
ஏரியூர் அருகே உள்ள தொன்னகுட்டஅள்ளியை சேர்ந்தவர் செல்விராதா.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள தொன்னகுட்டஅள்ளியை சேர்ந்தவர் செல்விராதா (வயது 27). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேடதட்டக்கல் கிராமத்தை சேர்ந்த வேலு (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தொன்னகுட்டஅள்ளியில் செல்விராதா வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலு, தொன்னகுட்டஅள்ளிக்கு சென்று செல்விராதாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர் வரமறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த வேலு, அரிவாளால் செல்விராதாவின் காதை அறுத்தார். வலியால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதையடுத்து வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த செல்விராதா சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.