ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி குத்துவிளக்கு ஏந்தி பெண்கள் போராட்டம்


ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி குத்துவிளக்கு ஏந்தி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:45 AM IST (Updated: 8 Aug 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்தின் கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி, குத்துவிளக்கு ஏந்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் ஒரு தோட்டம் இருந்தது. இந்த தோட்டத்தில் ஏற்கனவே 2 கிணறுகள் இருந்தன. இந்த நிலையில் 3–வதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடைபெற்றது.

இதன் காரணமாக ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் கிணற்றில் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய கிணறு வெட்டும் பணியை நிறுத்த வலியுறுத்தியும், அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை ஊராட்சிக்கு வழங்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கிணறு வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், கிராம மக்கள் சார்பில் சில பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிதாக வெட்டப்படும் கிணற்றில் இருந்து 3 மாதங்களுக்கு தண்ணீரை லட்சுமிபுரம் கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மேலும் கிணறு அமைந்துள்ள தோட்டத்தை லட்சுமிபுரத்தை சேர்ந்த யாரேனும் வாங்கிக்கொண்டால் கிணற்றை ஊராட்சிக்கு தானமாக வழங்குவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தோட்டத்தையும், கிணற்றையும் கிராம மக்களே வாங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கிணறு மற்றும் தோட்டம் அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கடந்த மாதம் 12–ந் தேதி விற்பனை செய்யப்பட்டதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது தோட்டம் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே தோட்டம் மற்றும் கிணற்றை வேறு நபருக்கு விற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், கிராம மக்கள் சார்பில் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிணறு மற்றும் தோட்டத்தை குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஊராட்சிக்கு கவர்னர் பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ அல்லது நிலத்தை வாங்கிய சுப்புராஜ் தரப்பினரோ எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து கிணறு, தோட்டத்தை ஊராட்சிக்கு வழங்க வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை கண்டித்தும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் குத்துவிளக்கு ஏந்தி தெருக்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். கிணறு மற்றும் தோட்டத்தை ஊராட்சிக்கு வழங்கும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story