தண்ணீர் எடுக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது
ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் சென்னை–பூந்தமல்லி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள இரு பகுதிகளிலும் தனியார் சிலர் சுமார் 50–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து லாரிகள் மூலம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை கண்டித்தும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று சென்னீர்குப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன், காலி குடங்களுடனும் பங்கேற்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘சென்னீர்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் விவசாயம் நடைபெற்றது. தற்போது விவசாயம் நடைபெறவில்லை. அந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தற்போது ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் போர்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது’’ என்றனர்.
கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.