குன்னத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் நடந்து சென்ற மாணவன் மின்னல் தாக்கி பலி


குன்னத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் நடந்து சென்ற மாணவன் மின்னல் தாக்கி பலி
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 7:19 PM GMT)

குன்னத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் நடந்து சென்ற மாணவன் மின்னல்தாக்கி பரிதாபமாக இறந்தான்.

குன்னத்தூர்,

குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்தவர் கணேசேன். விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி செண்பகம். இவர்களின் மகன் தரணிதரன் (வயது 14), மகள் தர்ஷினி (10). தரணிதரன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். தர்ஷினி ஆரம்ப பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை தர்ஷினியும், தரணிதரனும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் குன்னத்தூர், வெள்ளிரவெளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி–மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அப்போது பள்ளி நேரம் முடியவே, பள்ளியில் இருந்து தரணிதரன் மற்றும் 5 மாணவர்கள் மழையில் நனைந்த படி வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிள் நிறுத்தத்துக்கு சென்றுள்ளனர்.

இதை கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியில் இருந்து யாரும் வெளியில் செல்லவேண்டாம். மழைவிட்ட பின்பு செல்லலாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் படி ஆசிரியர் மாதேசுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, ஆசிரியர் மாதேஷ் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து, இடியுடன் கூடிய மழை பெய்வதால் மாணவர்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் கூறினார்.

இதை பொருட்படுத்தாமல் தரணிதரன் மற்றும் அவனுடன் வந்த மாணவர்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டு, மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு புறப்பட்டு நடந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் சைக்கிளை நகர்த்திய படி தரணிதரன் நடந்து சென்ற போது, அவனுடைய செருப்பு சேற்றில் சிக்கியதாக தெரிகிறது.

உடனே அவன், சைக்கிளை நிறுத்திவிட்டு வந்து, செருப்பை எடுக்க சென்றான். மற்றவர்கள் முன்னே சென்றுவிட, அவன் செருப்பை எடுத்துக்கொண்டு தனது சைக்கிளை நோக்கி திரும்பினான். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி இடித்ததுடன், தரணிதரன் மீது மின்னல் தாக்கியது.

இதில் அவன் படுகாயம் அடைந்தான். இதை பார்த்த ஆசிரியர்கள் தரணிதரனை மீட்டு வகுப்பறையில் படுக்கவைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குன்னத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், தரணிதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

மேலும் மின்னல் தாக்கியதில் பள்ளியில் இருந்த கணினிகளும் பழுதடைந்தன. இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story