சீராக குடிநீர் வினியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் சீராக குடிநீர் வினியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் ஓம்காளியம்மன்தெருவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஓம்காளியம்மன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிஅளவில் கனிராவுத்தர்குளம் சத்திரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு திரண்டனர். அவர்கள் காலிக்குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
எங்கள் பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் குறைவான நேரம் மட்டுமே விடப்படுவதால் எங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், எங்களுக்கு தேவையான தண்ணீரை விலைக்கு வாங்கி சேமித்து வைத்து இருந்தோம். ஆனால் அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் உருவாகும் அபாயம் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்கக்கூடாது என்று கீழே கொட்டிவிட்டனர். எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் பதில் அளித்த அதிகாரிகள், ‘குடிநீர் போதுமான அளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து சித்தோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையில் மறியல் போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.