விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம்,
ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமர வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கோலியனூர், காணை, பிடாகம், கண்டமானடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில், பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1.30 மணிக்கு மேல் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. 2.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடம் பெய்து ஓய்ந்தது.
பின்னர் மீண்டும் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 4.15 மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. விழுப்புரம் சுதாகர் நகர், கணபதி நகர், மணி நகர், சித்தேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கீழ்ப்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் சிறிது நேரம் அந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
உடனே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் பலத்த மழை காரணமாக மாலை 4.30 மணிக்கெல்லாம் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியும், தண்ணீரில் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதையும் காண முடிந்தது.
இதேபோல் கள்ளக்குறிச்சி, நீலமங்கலம், தென்கீரனூர், காரனூர், ரோடுமாமனந்தல், சின்னசேலம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதல் மதியம் வரை கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்கள், மாலை வேளையில் பெய்த திடீர் மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.