மாவட்டத்தை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்
கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று புவனகிரியில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு புவனகிரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு மூத்த உறுப்பினர் வரதராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நிதிநிலை அறிக்கை பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணை தலைவர் கற்பனை செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் கருப்பையன், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்பு குழு செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மாற்றும் முயற்சி கைவிட வேண்டும், பரங்கிப்பேட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை முற்றிலும் அகற்ற வேண்டும், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னதாக சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக மாதவன், பொருளாளராக தட்சிணாமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.