குடிநீர் கேட்டு பொதுமக்கள் மீண்டும் சாலைமறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு பொதுமக்கள் மீண்டும் சாலைமறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-08T02:33:32+05:30)

முக்காணியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆறுமுகநேரி,

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு வறண்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லவில்லை. அதன் அடிப்பகுதி வழியாக சிறிதளவே கசிவுநீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீரும், குரங்கணி, சொக்கப்பழங்கரை ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணைகளையும் தாண்டி செல்லவில்லை.

ஏரல் தரைமட்ட பாலத்தை கடந்து தண்ணீர் செல்லாததால், வாழவல்லான் நீரேற்று நிலையத்தில் இருந்து முக்காணி உள்ளிட்ட ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

பின்னர் ஏரல் தரைமட்ட பாலத்தில் 3 மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி கீழ்புறத்துக்கு அனுப்பினர். ஆனாலும் போதிய தண்ணீர் வாழவல்லான் நீரேற்று நிலையத்துக்கு செல்லவில்லை. இதனால், முக்காணியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அக்கிராம பொதுமக்கள், கடந்த வாரத்தில் 2 முறை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் ஏரல் தரைமட்ட பாலத்தின் அடியில் மேற்கு பகுதியில் ஆழமாக பள்ளம் தோண்டி, பழைய முறையில் கசிவுநீர் வேகமாக கீழ்புறம் செல்ல ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் முக்காணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 24 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று காலை 10 மணி அளவில் முக்காணி பஸ் நிறுத்தம் அருகில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மேலும் அங்குள்ள கடைகளும் மூடப்பட்டன.

உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வேன்களில் பொதுமக்கள் முக்காணிக்கு வந்து சாலைமறியலில் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் சாலையில் அமர்ந்து இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) ராஜாராம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் (ஆத்தூர்), சிவலிங்கம் (ஆறுமுகநேரி), ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், குடிநீர் வடிகால் நிர்வாக பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், முக்காணியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் வரையிலும், சாலைமறியலை கைவிட்டு செல்வது இல்லை என்று தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சாலையிலேயே சமையல் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, சமையல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்தினர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ‘இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு முக்காணியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மதியம் 12 மணி அளவில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்ற வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல் வழியாக சுற்றிச் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். 

Related Tags :
Next Story