நாட்டாண்மையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


நாட்டாண்மையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 3:45 AM IST (Updated: 8 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே நாட்டாண்மையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை தியாகராஜர்தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து (வயது 45). இவர் கடந்த 22-11-2015 அன்று பத்தமடையில் உள்ள கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த முனியராஜ் மனைவி செல்லம்மாள் என்பவர் கோவிலை சுத்தம் செய்ய கல்யாணி என்பவருக்கு ரூ.300 சம்பளம் தருவதாக கூறினார். அதற்கு சொரிமுத்து எதிர்ப்பு தெரித்து நான் 100 ரூபாய்க்கு கோவிலை சுத்தம் செய்து தருவேன் என்று செல்லம்மாளிடம் தகராறு செய்தார்.

அப்போது, அங்கு வந்த சொரிமுத்துவின் தந்தை தளவாய், ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறாய் என்று கூறினார். உடனே தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அந்த வழியாக வந்த அந்த ஊர் நாட்டாண்மை ரத்தினம் (61) என்பவர் சொரிமுத்துவிடம் ஏன் உன் தந்தையிடம் தகராறு செய்கிறாய் என்று கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த சொரிமுத்து அருகில் கிடந்த மண்வெட்டியால் ரத்தினத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினம் கடந்த 23-11-2015 அன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பத்தமடை போலீசார் கொலை வழக்குபதிவு செய்து சொரிமுத்துவை கைது செய்து நெல்லை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஜெயராஜ் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சொரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.எஸ்.துரைமுத்துராஜ் ஆஜரானார். 

Related Tags :
Next Story