மணல் குவாரியில் லாரிகளில் தார்ப்பாய் போடும் வேலையை மீண்டும் வழங்கவேண்டும் கிராம மக்கள் மனு


மணல் குவாரியில் லாரிகளில் தார்ப்பாய் போடும் வேலையை மீண்டும் வழங்கவேண்டும் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரியில் லாரிகளில் தார்ப்பாய் போடும் வேலையை மீண்டும் வழங்க வேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது நம்பர்-2 கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள 9 கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எங்கள் கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாய வேலைகள் கிடைக்காததால் நாங்கள் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டு உள்ள மணல் குவாரியில் கடந்த 8 வருடங்களாக மணல் நிரப்பி செல்லும் லாரிகளில் மட்டம் பார்த்து தார்ப்பாய் போட்டு அதனை இழுத்து கட்டி விடும் வேலை செய்து வந்தோம். இதில் கிடைக்கும் கூலி எங்கள் வாழ்வாதாரமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீர் என எங்களிடம் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி விட்டனர். நாங்கள் இதற்கான காரணத்தை கேட்க சென்றபோது அதிரடிப்படை போலீசார் மூலம் எங்களை விரட்டி அடித்து விட்டனர். இதனால் நாங்கள் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு மீண்டும் லாரிகளில் தார்ப்பாய் போடும் வேலையை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மத்திய- மாநில அரசுகள் தங்களது பங்களிப்பை செலுத்திய பிறகும் அதனை பெற்றுக் கொண்ட காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகைகளை வழங்காமல் கடந்த ஓராண்டு காலமாக அலைக்கழித்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகங்கள் மூலமாக 2016-ல் விதைப்பு மேற்கொள்ளாதவர்கள், நெற்பயிர் நடவு செய்து கருகியது என 2 வகைகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ததில் கிராமத்திற்கு 5 முதல் 10 பேருக்கு மட்டுமே இழப்பீடு தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகள் வட்டார வேளாண்மை துறை அலுவலகங்களுக்கும், வங்கிகளுக்கும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். அதிகாரிகளை கேட்டால் வரும், ஆனால் எப்போது வரும் என்று தெரியாது என்கிறார்கள். எனவே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அலைக்கழிக்காமல் உரிய பயிர் காப்பீடு தொகை கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தினர் அதன் பொதுச்செயலாளர் முகமது மஸ்தான் தலைமையில் வந்து, திருச்சி கலையரங்கம் திரையரங்கம் தற்போது மூடப்பட்டு இருப்பதால் அதனை சீரமைத்து நாடகம், பட்டிமன்றம், இசைக்கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும், என்று கோரி மனு கொடுத்தனர். அனைத்து மாவட்ட காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகை கனிமவள மற்றும் விவசாயிகள் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு துணையாக உள்ள பொதுப்பணித்துறையின் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சூறாவளிபட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்தனர். முசிறி தாலுகா துலையா நத்தம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களின் வைப்பு தொகை கையாடல் செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதிர்வு தொகையை உடனே வழங்கவேண்டும், என கோரி சிலர் மனு கொடுத்தனர். 

Related Tags :
Next Story