திருபுவனையில் மதுபான கடையை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
திருபுவனையில் புதிய மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை,
திருபுவனை சின்னபேட்– சன்னியாசிகுப்பம் செல்லும் சாலையில் போலீஸ் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய மதுபானக்கடை திறக்கப்பட்டது. தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தினர். இதை தொடர்ந்து அந்த மதுபானக்கடை மூடப்பட்டது.
ஆனாலும் இந்த மதுபானக்கடையை மீண்டும் திறக்கக் கூடாது என கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருபுவனை போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த போலீஸ் டி.ஜி.பி.சுனில் குமார் கவுதமிடமும் கிராம மக்கள் முறையிட்டனர்.
இந்த நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடையை நேற்று மீண்டும் திறக்க ஏற்பாடு செய்து வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த மதுபானக்கடைக்கு வந்தனர். கடையை முற்றுகையிட்ட அவர்கள் போராட்டத்திலும் இறங்கினர். வெயில் சுட்டெரித்த போதிலும் நடுரோட்டில் சாமியானா பந்தல் அமைத்து அங்கேயே அமர்ந்த அவர்கள் அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. கோபிகா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மதுபான கடையை அகற்றும் வரை அங்கிருந்து நகரமாட்டோம் என கூறிவிட்டனர்.மாலை 5 மணி அளவில் மழை பெய்தது. இருந்தபோதிலும் போராட்டத்தை கைவிடவில்லை. இரவு வரை போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.