ஓட்டப்பிடாரம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


ஓட்டப்பிடாரம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 2:15 AM IST (Updated: 8 Aug 2017 8:54 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் சாலையில் ஏ.கே.எஸ். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வந்தது. இந்த மது கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் பெண்கள் கடையை உடைக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகள், ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கூறினர். ஆனால் டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. தொடர்ந்து மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் இந்த கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பெருமாள், தலைவர் ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், ரகுநாதன், செல்லம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மகளிர் அணி தலைவி வள்ளியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் தாசில்தார் காளிராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story