எட்டயபுரம் அருகே மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு கட்டிட உரிமையாளர் காயம்


எட்டயபுரம் அருகே மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு கட்டிட உரிமையாளர் காயம்
x
தினத்தந்தி 9 Aug 2017 2:00 AM IST (Updated: 8 Aug 2017 9:20 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே நேற்று மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட உரிமையாளர் காயம் அடைந்தார்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே நேற்று மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட உரிமையாளர் காயம் அடைந்தார்.

கட்டிட தொழிலாளி

எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 45). கட்டிட தொழிலாளி. நேற்று அப்பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் (50) வீட்டின் மாடியில் தள ஓடு பதிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் குருசாமி உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். முத்துசாமி கட்டுமான பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

அப்போது மாலையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. ஆனாலும் தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் குருசாமியின் உடல் கருகி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் நின்று கொண்டிருந்த முத்துச்சாமியின் கைகள் கருகின.

தொழிலாளி சாவு

உடனே சகதொழிலாளிகள், அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த முத்துசாமிக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி இறந்த குருசாமிக்கு இந்திரா (40) என்ற மனைவியும், பிரியா (20), பாரதி (18) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.


Next Story