பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்


பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Aug 2017 3:30 AM IST (Updated: 9 Aug 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த டாஸ்மாக் கடை அருகே பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்லடம்,

பல்லடம் அருகே ஆலுத்துப்பாளையத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்றும் 2–வது நாளாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெண்கள் ஒரு பகுதியிலும், ஆண்கள் மற்றொரு பகுதியிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

ஆலுத்துப்பாளையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்போவதாக தகவல் கிடைத்ததும் உடனே நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதன்படி 10 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம். மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. எங்களது போராட்டத்தால் ஆலுத்துப்பாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 7–ந்தேதி ஆலுத்துப்பாளையத்தில் டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி டாஸ்மாக் கடை திறந்த அன்றே போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story